Monday, May 24, 2010

தேர்வு முடிவுகளுக்கு காத்திருக்கும் பெற்றோர்கள்

மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை எங்களது சொந்த ஊர். எனது அம்மா மற்றும் மனைவி ஊர் அருகே உள்ள கண்டிதமபேட்டை. எனது சகோதரியும் அதே ஊரில் திருமணம் செய்து கொண்டுள்ளார். எங்களுக்கு உறவினர்கள் அதிகம் கூடவே எனக்கு நண்பர்களும் அதிகம். எனது மகன் இந்த ஆண்டு மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்ததனால் என் மனைவி உறவினர் திருமணம் போன்ற பல முக்கிய நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்வதில்லை. எங்கேனும் முக்கியமான திருமணங்களுக்கு ஊருக்குச் சென்றாலும் மற்றைய விருந்துகளில் கலந்து கொள்வதில்லை. இரண்டு தாய் மாமன்கள் திருமணங்களில் என் மகன் கலந்து கொள்ள அனுமதிக்கப் படவில்லை. நாங்களும் திருமணம் முடிந்தவுடனே சென்னை திரும்பிவிட்டோம். எங்கள் உறவுக்காரர்கள் கூட எங்கள் பையன் படிக்கிறான் என்று நாங்கள் திருமணம் போன்ற நிகழ்சிகளுக்கு செல்லவில்லை என்றால் பரவாயில்லை என்று எங்களை ஒன்றும் சொல்வதில். முக்கிய உறவுக்காரர்களும் நண்பர்களும் அடிக்கடி தொலைபேசி மூலம் ஆலோசனைகள் கூறுவார்கள். எல்லோரும் கவலைப்பட்டார்கள் ஒத்து உழைத்தார்கள் ஆனால் இவன் மட்டும் எந்த கவலையும் படவில்லை. ஜனவரி மாதம் கடைசியாக பள்ளியில் நடைபெற்ற மாதிரி தேர்வுகளில் ஆறு நூறு மதிப்பெண்கள். மார்ச் மாதம் தேர்வு. பிப்ரவரியில் ஓரளவு படிப்பது போல் தோன்றியது. என் மனைவி தன்னை வருத்திக் கொண்டு ஒவ்வொரு பாடத்திலும் உள்ள ஒரு மதிப்பெண்களை எழுதிகொடுத்து திருத்துவது என தினமும் கடினமாக உழைத்தாள். இந்த ஒரு மாத காலத்தில் அவனிடம் சற்று முன்னேற்றம் கண்டது. நான் கணினி அறிவியல் மற்றும் கணிதத்தை எப்போதாவது சிறு சிறு சோதனைகளை செய்து பார்ப்பேன். நான் அவன் கணினி அறிவியலில் 180 மதிப்பெண்களுக்கு குறைவில்லாமல் வாங்கி விடுவான் என்று உணர்ந்தேன். கணிதத்தில் 140 மதிப்பெண்கள் பெற வாய்ப்பிருப்பதாக எண்ணினேன். பௌதீகம் மற்றும் வேதியியலில் 160க்கு குறைவில்லாமல் வாங்கி விடுவான் என்று எண்ணியிருந்தேன். ஆனால் எல்லாவற்றிலும் என்னுடைய எதிர் பார்ப்பை விட 15 மதிப்பெண்கள் குறைவே. மொத்தம் 866தான். நாம் என்னதான் சிரமப்பட்டாலும் பிள்ளைகள் மனது வைத்தால்தான் மதிப்பெண்கள் பெற முடியும். பல மாணவர்கள் மதிப்பெண் வாங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டு படிக்கிறார்கள். சிலர் நம்மால் கடைசி நேரத்தில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மமதை. பெற்றோர்கள் பதட்டப்படாமல் கோபப்படாமல் பிள்ளைகளிடம் அன்போடு நடந்து கொண்டால் ஓரளவு நல்ல மதிப்பெண்கள் எடுப்பார்கள்.